சீனாவிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ஆன்மீகப் பயணப் வந்த பெண் ஒருவர் கோவிட்-19 காய்ச்சல் (கொரோனா) பரிசோதனைக்காக செவ்வாய்க்கிழமை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
உலகையே அச்சுறுத்திவரும் கோவிட்-19 காய்ச்சலால் இதுவரை சீனாவில் மட்டும் 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 30 நாடுகளில் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளும் சீனாவில் இருந்து வரும் பயணிகளைத் தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர். இதே போல் சீனாவில் இருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இணையதளம் மூலம் விசா தரும் முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் சீனாவை சேர்ந்த ஜியாஞ்சுன் (48). இவர் கடந்த ஜனவரி 21-ஆம் தேதியன்று கொல்கத்தா வந்துள்ளார். அங்கிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ஆன்மிக பயணம் சென்றுவிட்டு திங்கள்கிழமை இரவு ராமேஸ்வரத்திற்கு வந்தவர் ராமநாதசுவாமி கோயில் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். தனியார் விடுதி நிர்வாகிகள் சீன பயணி தங்கியிருப்பதை கோவில் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.
தொடர்ந்து செவ்வாயன்று சீன பயணிக்கு சுகாதார அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு பின்னர் மேலதிக பரிசோதனைக்காக ராமேஸ்வரத்திலுந்து தனி வாகனம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மதுரையிலிருந்து சென்னையில் அவருக்கு கோவிட்-19 காய்ச்சல் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விமானம் மூலம் மீண்டும் சீன அனுப்பி வைக்கப்படுவார்.